COFFEE காபி







காபி சாப்பிடலாம் வாங்க!
- பாஸ்கரன்

சூடாய் ஒரு கப் காபி! நம்மில் பலர் காலைப் பொழுதுகளையே காபியில் நனைத்துத்தான் சாப்பிடுகிறோம். இந்த காபியை பற்றிய ‘கமகமக்கும்’ தகவல்களைத் தெரிந்து கொள்வோமா?


காபியை நமக்குக் காட்டிக் கொடுத்தவையே ஆடுகள்தான். முன்பொரு காலத்தில் எத்தியோப்பியாவில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள், திடீரென்று உடலை உதறிக்கொண்டு புராண கால பிரபுதேவாக்களாய் ஆடத் தொடங்கின. அவை மேய்ந்தவை காபிச் செடிகள். ஆடுமேய்ப்பவர்கள் ஆர்வமாய் அந்தச் செடியை ஆராய்ந்ததுதான் காபி என்கிற தேவபானம் கிடைத்த கதை.

அதன்பிறகு ஆப்பிரிக்கப் பழங்குடியினர், காபியை திரவமாகக் குடிக்கவில்லை, கொழுப்புச் சத்துடன் காபிக் கொட்டைகளைக் கலந்து சக்தி உருண்டைகளாய் உள்ளே தள்ளினார்கள்.

1675ல், இங்கிலாந்து அரசர் காபிக்குத் தடைவிதித்தார். ஏன் தெரியுமா, “காபி சாப்பிடுகிறேன் பேர் வழி” என்று காபி கடைகளில் மக்கள் கூடி, தனக்கெதிராக சதி செய்கிறார்கள் என்று நினைத்தார் அந்த சந்தேகப் பிரியாணி – ச்சே – சந்தேகப் பிராணி.

உலகில் பெரும்பாலானவர்கள் (ஏறக்குறைய 70%) அராபிகா காபியைத்தான் ஆசை ஆசையாய் அருந்துகிறார்கள். அராபிகா காபி என்பது லைட்டான காபி. வாசனையான காபி. மீதமுள்ள 30 சதவிகிதத்தினர் ரொபஸ்டா காபி சாப்பிடுகிறார்கள். இது ஸ்ட்ராங் காபி. அராபிகா காபியைவிட 50% கேஃபைன் கூடுதலாகக் கொண்ட காபி. நம்ம கும்பகோணம் டிகிரி காபி மாதிரி.

உலகிலேயே அதிகபட்சமாய் நடக்கும் வணிகங்களில் இரண்டாவது இடம் காபிக்குத்தான. முதல் இடம், எண்ணெய் வணிகத்துக்கு.

நியாயமாக, காபி மரத்தில் காய்க்க வேண்டியது. காபிச்செடிகள், 30 அடிவரை வளரக்கூடிய மகாவல்லமை பொருந்தியவை. மனிதர்கள்தான், காப்பிக் கொட்டையைப் பறிக்க வசதியாய் அவற்றை பத்தடிகளுக்கு மேல் வளர விடுவதில்லை. அந்த அடக்குமுறையின் கசப்பைத்தான் காபி தன் சுவையில் காட்டுகிறது. மனிதன் சர்க்கரை போட்டு சமாளித்துக் கொள்கிறான்.

இன்ஸ்டன்ட் காபியைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? ஜார்ஜ் வாஷிங்டன். அமெரிக்க ஜனாதிபதிக்கு வேறு வேலை இல்லையா என்கிறீர்களா? அவர் இல்லை இவர். இந்தப் புண்ணியவான் பெல்ஜியத்தை சேர்ந்தவர்.

காரமானவற்றை சாப்பிட்டுக்கொண்டே காபி சாப்பிடும்போது சாதாரண காபிகூட சூப்பராக இருக்கும். ஏன் தெரியுமா? காரம், உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மலர்த்தும். அதற்குப்பிறகு பருகும் காபி இன்னும் சுகமாக சுவைக்கும்.

அயல்நாடுகளில் காபி கேட்டால், நம் நாக்குக்கு சரிப்படாது. நீங்கள் அயல்நாடுகளுக்குப் போகும்போது, “காஃபி லேட்டே” என்று கேளுங்கள். லோட்டாவில் பருகும் நம்ம ஊர் காபிக்கு கொஞ்சம் தூரத்து சொந்தம் மாதிரி தெரியும்.

உள்ளூர் காபி தொடங்கி உலகக் காபி வரையில் எத்தனை ரகங்கள்! இதற்கொரு காப்பி’யமே பாடலாம். காப்பியக் கவிஞர் வாலி தயாரா?